| ADDED : நவ 15, 2025 05:59 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே டி. வேளாங்குளம் செல்லும் வழியில் பாலம் சேதமடைந்து இருப்பதால் கிராமத்திற்குள் பஸ்கள் வராமல் மாணவர்கள் தினசரி 3 கி.மீ., தூரம் நடந்து திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். டி. வேளாங்குளம் கிராமத்தில் 600 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். கிராம மக்களும் கூலி வேலை, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்காக திருப்புவனம், மதுரை சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டி.வேளாங்குளம் வரை தினசரி மூன்று முறை டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் இருந்து டி. வேளாங்குளம் வரை 3 கி.மீ துாரத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்ச்சாலை உள்ளது. இடையில் நீர்வரத்து கால்வாய் மீது 40 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் குழாய் வைத்து பாலம் கட்டப்பட்டது, உரிய பராமரிப்பு இல்லாததால் முண்டு கற்கள் சரிந்து பாலம் இடிந்து விட்டது. பாலத்தின் இரு புறமும் சேதமடைந்து விட்டதால் பஸ்கள் செல்ல முடியாமல் திருப்பாச்சேத்தியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாணவ, மாணவியர்கள் தினசரி 3 கி.மீ., நடந்து சென்று வருகின்றனர். புதிய பாலம் கட்ட பல முறை நெடுஞ்சாலைத் துறையிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில் : ஓரிரு நாட்களில் பாலம் பழுது பணிகள் சரிசெய்யப்பட்டு விரைவில் பஸ் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றனர்.