10 லட்சம் பனை விதை நடவு செய்ய இலக்கு
சிவகங்கை; மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர்நிலை ஓரங்களில் 10 லட்சம் பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:பசுமையான தமிழகத்தை உருவாக்கிட மாநில அளவில் 6 கோடி பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய பனைமரம் வளர்ப்பதன் மூலம் நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். கண்மாய், ஏரி, ஊரணி கரை மற்றும் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் போது, நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் தயாரிக்க அடிப்படையாக திகழும். மாநில அளவில் 6 கோடி பனை விதைகள் நட இலக்கு வைத்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் அனைத்து ஒன்றியத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன என்றார். முன்னதாக திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலய பகுதியில் பனை விதைகளை நட்டு இத்திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், மாவட்ட வன அலுவலர் (பொ) ரேவதிராமன், உதவி வன பாதுகாவலர் மலர்கண்ணன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுதுறை ஆனந்த் நாகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன், தாசில்தார் நாகநாதன், பி.டி.ஓ., முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி, திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி, அழகப்பா பள்ளி குழுமம், அழகப்பா நர்சிங் கல்லுாரி, பூலாங்குறிச்சி அரசு கல்லுாரி மாணவ, மாணவிகள், செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்றனர்.