முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் அரோகரா... கோஷமிட்டு முருகனை வழிபட்டனர்.சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் கவுரி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், பறவை காவடி, காவடி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு முருகனுக்கு பால், பன்னீர் அபிேஷகம் செய்தனர்.சிவகங்கை அருகே கட்டாணிபட்டியில் மலைமீது அமைந்துள்ள மலைக்கந்தன் சுவாமிக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராம பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கட்டாணிபட்டி மலைக்கந்தன் கோயிலில் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவள்ளி அம்பாள் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு 11:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் தைப்பூச விழா நிறைவு பெற்றது.சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவனுார் முருகன் கோயிலில், சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசித்து சென்றனர். சுவாமிக்கு பால், பன்னீர், சந்தன அபிேஷகம் செய்தனர்.