உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாகி 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.

மடையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாகி 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.

சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 100க்கும் மேற்பட்ட பெரிய பாசன கண்மாய்கள் உள்ளன. இது தவிர ஜமீன் கண்மாய்கள், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள சிறு கண்மாய்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு பல கண்மாய்களில் மராமத்து பணி நடைபெற்றது. பெரும்பாலான கண்மாய்களில் மடைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மடைகள் பெயரளவுக்கு மட்டும் சீரமைக்கப்பட்டன. கண்மாய் நிரம்பினால் மடை உடைந்து தண்ணீரும், பயிரும் வீணாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்ஆனாலும் அதிகாரிகள் மடைகள் விஷயத்தில் முறையாக ஆய்வு செய்யாமல் பணிகளை செய்து வந்தனர்.சில வருடங்களாக ஒரு சில கண்மாய்கள் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தன. குறிப்பாக இந்தாண்டு பிரான்மலை விநாயகர் கண்மாய், வேங்கைப்பட்டி புதுக்கண்மாய், மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் மறுகால் பாய்ந்தன.கடந்த மாதம் விநாயகர் கண்மாய் மடையில் கசிவு ஏற்பட்டு இரவு பகலாக விவசாயிகள் போராடி சரி செய்தனர். ஆனாலும் சிறிய அளவு தண்ணீர் கசிந்து வீணாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் 80 ஏக்கர் பரப்புள்ள புதுக்கண்மாய் மடையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய உடைப்பால் அதிக தண்ணீர் வீணாகி 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.இரண்டு நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு வெளி மாவட்ட ஆட்களை வரவழைத்து உடைப்பு சரி செய்யப்பட்டது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே அனைத்து கண்மாய்களையும், மடைகளையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதிகாரிகள் முறையாக கவனித்து இருந்தால் மடை உடைப்புகளை தடுத்திருக்க முடியும்.இனி ஒரு காலங்களிலாவது அனைத்து கண்மாய்களையும் மறு ஆய்வு செய்து மடைகளை முழுமையாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 14, 2024 10:14

நமது முன்னோர்கள் செய்தது போல தண்ணீர் வரத்து கால்வாய்களையும் தன்மைகளையும் விவசாயிகள் மராமத்து பண்ணி அதிக அளவு தண்ணீரை சேமித்துவைக்கவேண்டியது . கண்மாய்களை தூர்வாரும் வண்டலை ஒரு டிராக்டர் பணம் மூலம் வசூலித்து இந்த சிலவை சமாளிக்கலாம் .


புதிய வீடியோ