குண்டும் குழியுமான சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோடு
சிவகங்கை: சிவகங்கை அருகே டி.புதுாரில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லக்கூடிய ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லக்கூடிய ரோடானது புதுார் வழியாக செல்கிறது. புதுார் துவக்க பள்ளி அருகே ரோடு முழுவதும் சேதமடைந்து மழைநீர் தேங்கியுள்ளது. கலெக்டர், எஸ்.பி அலுவலகம், நீதிமன்றம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அலுவலர்கள் காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகின்றனர். இவர்கள் தினமும் சிவகங்கைக்கு ரயில் மூலம் செல்கின்றனர். இதற்காக டூவீலர், ஆட்டோக்களில் இந்த ரோட்டில் செல்கின்றனர். இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றன. குறிப்பாக சென்னை செல்லும் இரவு நேர ரயில்களை பிடிக்க செல்லும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.