உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாய் துார்வாருவதில் முரண்பட்ட பதில் கேலிக்கூத்தாகும் குறைதீர் கூட்டம்

கண்மாய் துார்வாருவதில் முரண்பட்ட பதில் கேலிக்கூத்தாகும் குறைதீர் கூட்டம்

சிவகங்கை: திருப்புவனம் பனையனேந்தல் கண்மாய் துார்வாருவதில், விவசாயிக்கு பொதுப்பணித்துறை அதிகாரி மாறுபட்ட பதில் அளித்ததால், சிவகங்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன் சர்ச்சை ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பனையனேந்தல் கண்மாய் மூலம் 209 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கின்றனர்.பல ஆண்டாக துார்வாரப்படாமல் உள்ள கண்மாயை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், தனியார் பங்களிப்புடன் பொதுப்பணித்துறையினர் இக்கண்மாயை 2025 மார்ச் 29ல் துார்வாரினர். 10 நாட்கள் துார்வாரிய நிலையில் இயந்திரம் பழுதானதால் பணியை நிறுத்திவிட்டனர். பாதியில் நின்ற பணியை விரைந்து துவக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரியிடம், விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரே கோரிக்கைக்கு 3 வித பதில்

கோரிக்கை வைத்த சொக்கநாதிருப்பு விவசாயி கோபாலுக்கு, பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) செயற்பொறியாளர் ரமேஷ் மூன்றுவித மாறுபட்ட பதிலை வழங்கியது தான் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விவசாயி வாசித்த முதல் பதிலில் (மே 7 அன்று) கூடுதல் இயந்திரம், டிப்பர் லாரியை பயன்படுத்தி துார்வாரப்படும். இரண்டாவது பதிலில் (மே 26அன்று) தற்போது மழை பெய்துள்ளதால், கண்மாய்க்குள் இயந்திரத்தை இறக்கி வேலை செய்ய முடியாது. மூன்றாவது பதிலில் (மே 30 அன்று) பனையனேந்தல் கண்மாய் துார்வார வரும் நிதியாண்டில் அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் துார்வாரப்படும் என பதில் அளித்ததை கண்டித்து, கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்து, குறைதீர் கூட்டத்தை விவசாயி கோபால் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

கலெக்டர் அதிருப்தி

அப்போது பேசிய கலெக்டர், வெளிநடப்பு செய்வது உங்கள் உரிமை. பொதுப்பணித்துறை அதிகாரியும் முன்பு அளித்த பதிலை, ஆராய்ந்து அதற்கேற்ப அடுத்த பதிலை தந்திருக்க கூடாதா என பொதுப்பணித்துறை அதிகாரிகளை பார்த்து அதிருப்தியுடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !