குடிநீர் ஆதாரமான பருப்பூரணி குப்பை கிடங்கான அவலம் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி
காரைக்குடி: காரைக்குடியில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பருப்பூரணி, குப்பை கிடங்காக மாறியுள்ளதோடு, மாநகராட்சி சார்பில், கரைகளை சுத்தம் செய்து காய்கறி கடை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கிடப்பில் கிடக்கிறது.காரைக்குடி மாநகராட்சியில் வ.உ.சி., ரோடு அருகே, பாரம்பரிய பருப்பூரணி உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. ஊரணியை பாதுகாக்க கோரிக்கை விடுத்ததின் பேரில், ஊரணியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது.ஆனால் ஊரணியை சுற்றி குப்பை, கோழிக்கழிவு கொட்டப்படுவதோடு, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. இரவு நேரங்களில் மக்கள் அப்பகுதியில் செல்லவே அச்சமடை கின்றனர்.குப்பை கொட்டுவதை தவிர்க்க ஊரணி கரை சுத்தம் செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஊரணியை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.