மேலும் செய்திகள்
பழமையான குளத்தை சீரமைக்க கோரிக்கை
17-Nov-2024
திருப்புத்துார்: திருப்புத்துார் தென்மாப்பட்டில் சேதமடைந்து புதர் நிரம்பியுள்ள தம்மம் ஊருணியை சீரமைத்து நீர்வரத்திற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பாக திருப்புத்துார் நகரில் 22 ஊரணிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது சில ஊரணிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் பயன்பாட்டில் இல்லாத முக்கியமான குடிநீர் ஊரணி தம்மம் ஊருணி. தென்மாப்பட்டு எல்லையில் கண்டரமாணிக்கம் ரோட்டிலுள்ள இந்த ஊரணி அப்பகுதியினருக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக இருந்தது.2007ல் நீராதார மேம்பாடு திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணி நடந்தது. பின்னர் தொடர் பராமரிப்பின்றி முட்காடாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிந்து விட்டதால் ஊருணிக்கு நீர்வரத்தின்றி போனது. ஊரணியில் நீர் பெருகவில்லை. படித்துறை சேதமடைந்து தற்போது ஊரணி முழுவதும் புதர் மண்டி முட்காடாகி விட்டது. அப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு குறைந்து நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரணியில் சேதமடைந்த தடுப்புச்சுவர் மற்றும் படித்துறையை சீரமைத்து, நீர் வரத்திற்கு நிரந்தரமான வரத்துக்கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
17-Nov-2024