பள்ளி முன் தேங்கும் சாக்கடை ஓயாத மழைக்கால போராட்டம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளி முன் தேங்கும் சாக்கடை கலந்த மழைநீரால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் உள்ள அரசு துவக்கப் பள்ளி எண் 2 முன்பாக உள்ள கழிவுநீர் கால்வாய் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது சிதிலமடைந்து தூர்வாரப்படாமல் அடைபட்டு காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பள்ளி முன்பாக சாக்கடையுடன் கலந்து தேங்கி விடுகிறது. அந்நேரங்களில் மாணவர்கள் பள்ளி உள்ளே செல்லவோ அல்லது, வெளியே வரவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். வேறுவழியின்றி முழங்கால் அளவு சாக்கடை நீரில் மாணவர்கள் நடந்து வர வேண்டிய அவலம் உள்ளது. இதனால் சில பெற்றோர்கள் மாணவர்களை நேரில் வந்து அழைத்துச் செல்கின்றனர். இருந்தாலும் பலர் சாக்கடை நீர் வழியாக நடந்து வரும்போது நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி முன்பாக நிரந்தர தீர்வு காணும் வகையில் மழை நீரும் கழிவு நீரும் தேங்காதவாறு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.