ஒரு முருங்கைக்காய் விலை ரூ.20
திருப்புவனம்: தை பிறந்ததை அடுத்து திருப்புவனம் காய்கறி மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்புவனம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர். மதுரை மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்கின்றனர். கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்டவைகள் அல்லிநகரம், மாரநாடு, சொக்கநாதிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் காய்கறிகள் விலை உயர்வது வழக்கம்.பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் முருங்கைக்காய் விலை மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ளது. மதுரை மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ முருங்கைகாய் ரூபாய் 50 என விற்பனை செய்த நிலையில், ( 7 முதல் 10 காய்கள் வரை இருக்கும்) தற்போது ரூபாய் 160 முதல் 180 வரை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு காய் 20 ரூபாய் என விற்பனை செய்வதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில்; தை பிறந்துள்ள நிலையில் இனி திருமணம், காதணி விழா என விசேஷங்கள் அடிக்கடி நடைபெறும் காய்கறிகளின் தேவை அதிகமாக இருக்கும், மற்ற காய்கறிகளை விட முருங்கைக்காய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சிறிய முருங்கைக்காய் 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சாம்பாருக்கு முருங்கைக் காய் பயன்படுத்தினால் தான் ருசி கூடும். தக்காளி 5 கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.வியாபாரிகள் கூறுகையில்: திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை, பனிப் பொழிவு காரணமாக முருங்கை பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது மதுரை மார்க்கெட்டிலேயே முருங்கைக்காய் சில்லறை விற்பனையில் 15 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இனி மார்ச் மாதம் தான் விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.