தேங்காய் விலை இருமடங்கு உயர்வு
மானாமதுரை; தமிழகத்தில் சபரிமலை சீசன் மற்றும் தேங்காய் விளைச்சல் குறைவால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது.தமிழகத்தில் பொள்ளாச்சி,மன்னார்குடி, தஞ்சாவூர்,திருப்புவனம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இங்கிருந்து தமிழகம் முழுவதுமுள்ள ஊர்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கார்த்திகை 1ம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர். தேங்காய் விளைச்சல் அதிகமுள்ள ஊர்களில் விளைச்சல் குறைந்ததாலும் தமிழகத்தில் தேங்காய்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.15க்கு விற்ற தேங்காய் ஒன்று தற்போது ரூ.30க்கும், ரூ.20க்கு விற்ற தேங்காய் ரூ.40க்கும், ரூ. 25க்கு விற்ற தேங்காய் ரூ.50க்கும், ரூ.30க்கு விற்றவை ரூ.60 என இரு மடங்காக உயர்ந்துவிட்டன.தேங்காய் வியாபாரி சரவணன் 43 கூறியதாவது: பொள்ளாச்சியில் தேங்காய் விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால், மார்க்கெட்டிற்கு தேங்காய் வரத்தும் குறைந்தன. ஐயப்ப பக்தர்கள் மூலம் தேங்காய் தேவைகளும் அதிகரித்துள்ளன. வரத்து குறைந்த நிலையில், தேவை அதிகரித்ததால், விலையும் இரு மடங்காக உயர்ந்துவிட்டன, என்றார்.