தொடங்கியது மின்வெட்டு தவித்த பொதுமக்கள்
திருப்புவனம், மார்ச் 30-திருப்புவனத்தில் நேற்று ஒரே நாளில் பத்திற்கும் மேற்பட்ட முறை மின்சாரம் தடை பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் நகர்பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.திருப்புவனத்தில் 18 வார்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருப்புவனம் கிழக்கு மற்றும் மேற்கு மின் பகிர்மான வட்டத்தில் 24 ஆயிரத்து 871 மின் இணைப்புகள் உள்ளன. திருப்புவனத்தில் கடந்த 20ம் தேதி முதல் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வு முடிந்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் பத்திற்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இரவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டில் நடமாட முடியாமல் பெண்கள் அச்சத்திற்குள்ளாகினர்.பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் நாள் ஒன்றுக்கு பத்திற்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்பட்டனர்.கோடை காலம் தொடங்கும் முன்னரே மின்வெட்டு தொடங்கியதால் வரும் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது.