உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மீண்டும் தண்டவாள கிளிப் அகற்றம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மீண்டும் தண்டவாள கிளிப் அகற்றம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று காலை தண்டவாளத்தில் இருந்த கிளிப்கள் மீண்டும் அகற்றப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று காலை 8:00 மணிக்கு திருச்சி டெமு ரயில் புறப்பட தயாரானது. அப்போது ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்குரிய ஒருவர் நிற்பதை கவனித்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் டெமு ரயில் டிரைவர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது 2 கிளிப்கள் அகற்றப்பட்டிருப்பதை கண்டனர். அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அகற்றப்பட்டிருந்த கிளிப் உடனடியாக பொருத்தப்பட்டதை தொடர்ந்து திருச்சிக்கு டெமு ரயில் புறப்பட்டு சென்றது.ரயில்வே போலீசார் கூறியதாவது: சந்தேகத்துக்குரிய முறையில் நின்ற நபரிடம் விசாரித்ததில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் கிளிப் கழன்று கிடந்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் உள்ள கிளிப் அவ்வப்போது ரயில்கள் செல்லும் அதிர்வினாலும், கிரீஸ் வைக்கும் போதும் ஒன்றிரண்டு தானாக கழன்றும் விடும். அதனை கீமேன்கள் சரி செய்வது வழக்கமான ஒன்று தான். அதே போன்று தான் நேற்றும் கிளிப் கழன்று விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர்.செப்., 16 ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் இருந்த 420 கிளிப்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ரயில்வே டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில் 3 தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே 2 கிளிப் கழன்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை