துவங்கியது மழைக்காலம் பள்ளி முன் தேங்கும் மழை நீர்
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் முன் மழை நீர் தேங்குவதால் மாணவர்கள் சிரமப் படுகின்றனர். மானாமதுரை தாலுகா விற்குட்பட்ட மேல நெட்டூர், கல்குறிச்சி, பறையன்குளம், மிளகனுார், மூங்கில்ஊருணி, வேதியரேந்தல், வெள்ளிக்குறிச்சி ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலைப் பள்ளியும், மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்ன கண்ணனுார், இடைக் காட்டூர், கட்டிக்குளம், சொம்புக்காரனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. தற்போது மழை துவங்கியதை தொடர்ந்து பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதிய மராமத்து இல்லாத காரணத்தினால் மழை நீர் தேங்கி வருகிறது. பல பள்ளிகளில் மழை நீர் வகுப்பறைகளில் புகுவதால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரி விக்கும் நிலையில் பொதுப்பணித்துறை நிர்வாகத் தினர் பள்ளி முன்பாக தேங்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் திட்ட மதிப்பீ டுகளை மட்டும் தயாரித்து அந்தந்த பள்ளிக்கே அனுப்பி வருவதால் தலைமை ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். சூரக்குளம் பில்லறுத்தான் பா.ஜ.,நிர்வாகி ரவிச்சந்திரன் கூறியதாவது: பறையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி முன் 5 வருடங்களுக்கும் மேலாக சிறிய மழை பெய்தாலே மழை நீர் தேங்குவதால் மாணவர்கள் சிரமப் படுகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் பல வருடங்களாக கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது: பறையங்குளம் அரசு உயர்நிலை பள்ளி முன் மழை நீர் தேங்காதவாறு சரி செய்வதற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.நிதி வந்தவுடன் உடனடியாக பணிகள் துவங்கப்படும் என்றார்.