உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மீண்டும் பேனர் கலாசாரம் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க உள்ளாட்சிகள் தயக்கம்..

மீண்டும் பேனர் கலாசாரம் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க உள்ளாட்சிகள் தயக்கம்..

சிவகங்கை: கோர்ட், அரசு உத்தரவை மீறி சிவகங்கை நகராட்சி ரோடுகளில் மீண்டும் பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை பள்ளிக்கரணை அருகே 2019ல் டூவீலரில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது ரோட்டில் இருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனால் பிளக்ஸ் பேனர் வைக்க ஐகோர்ட் தடை விதித்தது. ஆரம்பத்தில் இந்த உத்தரவை அமல்படுத்த உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். ஆனால் காலப்போக்கில் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது.சிவகங்கை நகராட்சியில் பேனர் கலாசாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதி, அரண்மனை வாசல், திருப்புத்துார் ரோடு பழைய நீதிமன்ற வளாகம், ராமச்சந்திரா பூங்கா, கல்லுாரி ரோடு உள்ளிட்ட மக்கள் சந்திப்பு அதிகம் உள்ள ரோடுகளில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் பேனர்களை மறைத்து வைப்பதால் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.திருமண நாட்களில் ஒவ்வொரு திருமண மண்டபம் முன்பும் ரோட்டில் வைக்கப்படும் பேனரால் அந்த வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர்.நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நகராட்சி பகுதியில் மக்கள்கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை நகராட்சி அதிகாரிகள், போலீசார் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ