விதைத்த நெல் முளைக்கவில்லையே; மழையில்லாமல் விவசாயிகள் கவலை
இளையான்குடி; இளையான்குடியில் மானாவாரியாக நெல் விதைத்த நிலையில் மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இளையான்குடி தாலுகாவில் சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், பகுதிகளை ஒட்டி 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெய்யும் மழையை வைத்து கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு மானாவாரியாக நெல்லை விதைத்து விவசாயம் செய்து வருகிற நிலையில் கடந்த ஆடிப்பட்டத்தின்போது போதிய மழை இல்லாமல் மிகவும் தாமதமாக விவசாயிகள் தங்களது வயல்களை உழுது சமன் செய்து நெல் விதைகளை துாவினர். கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் அடித்து வருவதன் காரணமாக விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் உள்ளன. மேலும் விதை நெல்களை பறவைகள் உண்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: வானம் பார்த்த இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையை வைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லாததால் விதைத்த நெல்மணி முளைக்காமல் பறவைகள் அதனை உணவாக்கி விடுகின்றன. இதனால் மீண்டும் விதைநெல்களை விலை கொடுத்து வாங்கி தூவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த வருடம் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.