திருக்கோஷ்டியூர் தங்க விமான கும்பாபிஷேகம்
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கான தங்க கலச கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைக்கு நவ.30ல் முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம் நடைபெறும். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 108 வைணவ திருத்தலங்களின் ஒன்றான இக்கோயிலில், மூலவர் விமானம் அஷ்டாங்க விமானம் ஆகும். திருக்கோஷ்டியூரில் நான்கு நிலைகளுடன் 136 அடி உயரத்துடன் உள்ளது. அதில் 90 அடி வரை கல்லாலானது. மீதமுள்ளவை சுதை வேலைப்பாடுகளாலானது. 'ஓம் நமோ நாராயணா' என்ற 3 வார்த்தைகளை பிரதிபலிக்கும் வகையில் 3 தளங்களுடன் உள்ளது. இந்த விமானத்திற்கு 2007ல் பாலாலயம் நடந்து தங்கதகடு வேயும் திருப்பணி துவங்கியது. 3 தளங்களில் உச்சி தளத்திற்கு சுதைகளுக்கு தாமிரத் தகடு பொருத்தி, தங்கத் தகடு வேயும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கான கும்பாபிேஷகம் 2026 பிப்.,6ல் நடைபெற உள்ளது. கும்பாபிேஷக யாகசாலை பூஜைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நவ., 30ல் காலை 9:36 மணிக்கு மேல் 10:12 மணிக்குள் நடக்க உள்ளது. விழா ஏற்பாட்டை தேவஸ்தான நிர்வாகிகள், டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.