சுயதொழிலுக்கு மாறும் திருப்புவனம் மாணவிகள்
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாததால் மாணவிகள் பலரும் பிளஸ் 2 முடித்தவுடன் படிப்பை நிறுத்தி விட்டு சுய தொழிலுக்கு மாறி வருகின்றனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், கீழடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிராமப்புறங்களில் பெற்றோர்கள் பலரும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். பெண் குழந்தைகளை அதிக பட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு வரையே பயில அனுமதிக்கின்றனர். அதன் பின் கல்லுாரி செல்ல மதுரை, சிவகங்கை செல்ல வேண்டும், செலவு அதிகரிப்பதால் பெற்றோர்கள் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு தையல்கலை, டைப்ரைட்டிங் என தொழிற்கல்விக்கு அனுப்பி விடுகின்றனர்.ஒவ்வொரு வருடமும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வெளியேறுகின்றனர். இதில் 300 மாணவிகள் மட்டுமே கல்லுாரி படிப்பிற்கு செல்கின்றனர். மற்றவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு செல்கின்றனர். அதுவும் முடியவில்லை என்றால் திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர். மாணவிகள் தரப்பில் கூறுகையில்: தையல்கல்வி முடிக்கும் பெண்களுக்கு சொந்தமாக தையல் இயந்திரம் வாங்க முடிவதில்லை. தையல் இயந்திரம் இலவசமாக கேட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மையத்திடம் விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை. 20 வயது நிறைவடைந்தால் தான் விண்ணப்பமே ஏற்றுகொள்ளப்படுகிறது.அப்படியே விண்ணப்பித்தாலும் உடனடியாக கிடைப்பதில்லை. வருடக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் மகளிர் கல்லுாரி தொடங்க வேண்டும் அல்லது தையற்பயிற்சி முடித்தவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.