துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது * மார்க்சிஸ்ட் சண்முகம் சேம்சைடு கோல்
திருப்புவனம்: துாத்துக்குடி துப்பாச்சூடு அறிக்கை 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது, அதற்கு காரணமான அதிகாரிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் சண்முகம் பேசினார்.அஜித்குமார் கொலைக்கு நியாயம் வேண்டி மார்க்சிஸ்ட் சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியது: தமிழகத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான நகை திருட்டுக்கள் நடக்கின்றன. புகார் கொடுத்த பெண் நிகிதா மீது பல புகார்கள் உள்ளன. காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்யும் அளவுக்கு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த மேலதிகாரி யார் என்ற கேள்வி எழுகிறது.துாத்துக்குடி சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை அளித்தும் தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது. துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏ.டி.ஜி.பி., ஜெயராமன் தமது சொந்த காரில் ஆட்களை கடத்துகின்றார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.போலீசை எதிர்த்து வழக்கு நடத்துவது சாதாரண காரியமில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியதை வரவேற்கிறோம். கைது செய்யப்பட்ட போலீசார் தீர்ப்பு வரும் வரை சிறையிலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு நீதியும் நிவராணமும் கிடைக்கும் வரை களத்தில் நின்று போராடுவோம், என்றார்.