முனைவென்றியில் டிரான்ஸ்பார்மர் பழுது
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள முனைவென்றியில் டிரான்ஸ்பார்மர் பழுது மற்றும் குறைந்தழுத்த மின்சாரத்தால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.இளையான்குடி அருகே உள்ள முனைவென்றியில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல்,வாழை,பருத்தி, மிளகாய் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் 50க்கும் மேற்பட்ட இலவச மின் இணைப்பில் பம்பு செட் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.கடந்த சில வாரங்களாக இப்பகுதி டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுது ஏற்படுவதோடு குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் மோட்டார்களை இயக்க முடியாமலும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பாதித்துள்ளதாக கூறி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மாவட்டம் நிர்வாகம் இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கி பிரச்னையை தீர்க்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.