உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் தகிக்கும் வெயில் வெளியேற தயங்கும் பயணிகள்

மாவட்டத்தில் தகிக்கும் வெயில் வெளியேற தயங்கும் பயணிகள்

திருப்புவனம்: கோடை வெயில் காரணமாக பஸ்களில் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பலரும் குடும்பத்துடன் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக ராமேஸ்வரம், ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி, சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு கோட்டங்கள் சார்பாக புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை இயக்கப்படுகிறது. வழிநெடுகிலும் மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களில் ஓய்விற்காக சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பஸ்களில் அதன் தாக்கம் கடுமையாக எதிரொலித்து வருகிறது. பஸ்களின் கூரை பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மரத்தால் அமைக்கப்பட்டது.இதனால் வெயில் காலங்களில் ஓரளவிற்கு வெப்பத்தை தாங்கி கொண்டது. சமீப காலமாக இயக்கப்படும் புதிய பஸ்களில் கூரை இரும்பு தகடால் அமைக்கப்பட்டுள்ளது. உட்புறமும் பிளைவுட், மைக்கா ஷீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 'இவை வெப்பத்தை அப்படியே உள்ளிழுக்கின்றன. இதனால் பஸ்களில் அமரவே முடியவில்லை. நான்கு வழிச்சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் பஸ்கள் இயக்கத்தின் போதும் வெப்பம் குறைவதில்லை. பயணிகள் கூறுகையில் புதிய பஸ்களில் இருக்கைகள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அரை அடிக்கு மட்டும் தான் திறக்க முடியும் அதில் காற்று வருவதே இல்லை. பஸ் ஸ்டாண்ட்களிலும் பஸ்கள் வெயிலிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்சில் வெப்பம் குறைவதே இல்லை. மதுரையில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் வெயில் காரணமாக மிகுந்த புழுக்கமாக உள்ளது. இதனால் பகலில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. வரும் காலங்களிலாவது பஸ்களின் கூரை வெப்பத்தை தணிக்கும் வண்ணம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை