நோய் தொற்று கால்நடைகளுக்கு சிகிச்சை
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.சிங்கம்புணரியில் ஏராளமான மாடுகள் நோய் தொற்றால் பாதித்ததாக தினமலரில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று சேவுகமூர்த்தி கோசாலையில் கால்நடை மருத்துவத் துறையினர் சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடைகள் பராமரிப்பு பற்றியும், நோய் தாக்குதல்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிங்கம்புணரி கால்நடை உதவி மருத்துவர் ம.ரஞ்சிதா கூறியதாவது: சில இடங்களில் மாடுகளுக்கு கால் தாங்கல், குளம்பு பாதிப்புகளால் அவதிப்படுகின்றன. மாட்டு கொட்டகைகளில் நீர் தேங்குவது, ஈரப்பதம், சகதிகளால் இந்த பாதிப்பு ஏற்படும். மழைக்காலத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மாடுகளை பாதுகாக்க முறையாக மாட்டு கொட்டகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்றார்.