ஹிந்து அறநிலைய கோயில் நிலத்தில் மரக்கன்றுகள் நட திட்டம் 2 மாவட்டத்திற்கு 1 லட்சம் இலக்கு
சிவகங்கை: தமிழக அளவில் ஹிந்து அறநிலையத்துறை இடங்களில் பனை, இலுப்பை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் 44,800 கோயில்கள் வரை உள்ளன. இக்கோயில்களை கண்காணிக்க இரண்டு மாவட்டத்திற்கு ஒரு இணை கமிஷனர் வீதம் மாநில அளவில் 38 இணை கமிஷனரின் கீழ் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் எந்தந்த கோயிலுக்கு எவ்வளவு நிலம் சொந்தமானது என்பது குறித்து அளவீடு செய்ய அந்தந்த இணை கமிஷனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் ஹிந்து அறநிலைய கோயிலின் கீழ் 2 லட்சம் ஏக்கர் நிலங்களை கண்டறிந்து, அளவீடு செய்துள்ளனர். இன்னும் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் நிலங்களில் மரக்கன்றுகள்
கண்டறியப்பட்ட கோயில் நிலங்களில் பயன்பாடின்றி கிடக்கும் நிலங்களில் ஒரு இணை கமிஷனரின் கீழ் உள்ள கோயில் நிலங்களில் 1 லட்சம் பனை, இலுப்பை, தலவிருட்சம், நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். குறிப்பாக பயன்பாட்டில் இல்லாத கோயில் நிலம், கோயில் பெயரில் உள்ள பட்டா உள்ள நிலம், ஆக்கிரமிப்பு மற்றும் வருமானம் இல்லாத நிலையில் உள்ள நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கோயில் நிலம் பாதுகாப்பு
ஹிந்து அறநிலைய அதிகாரி கூறியதாவது: கோயில் நிலங்களை பாதுகாக்கும் நோக்கில், நிலங்களை கண்டறிந்து, தண்ணீர் வசதி உள்ள, இல்லாத நிலத்தை பிரித்து அதில் பலன் தரக்கூடிய பழமரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம், என்றார்.