சூடாமணிபுரத்தில் பயனில்லாத பூங்காக்கள்
காரைக்குடி: காரைக்குடி சூடாமணிபுரத்தில் 3 பூங்காக்கள் இருந்தும், பராமரிப்பு, மின்விளக்கு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. காரைக்குடி சூடாமணிபுரம் மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. சூடாமணிபுரத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் 2015- --16 ஆம் ஆண்டு 3 பூங்காக்கள், தலா ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. சிறுவர்கள் விளையாட விளையாட்டு திடல், நீரூற்று, புல்வெளி, நடைபாதை. பயிற்சி இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. மாலையிலும், விடுமுறை நாட்களிலும், ஏராளமானோர் வந்து சென்றனர். தற்போது பல வருடங்களாக போதிய பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. சூடாமணிபுரம் வீட்டு உரிமையாளர் நலச்சங்க செயலாளர் பாண்டியன் கூறுகையில்: இங்கு 3 பூங்காக்கள் உள்ளது. 3 பூங்கா தேவையில்லை. ஒரு பூங்காவையாவது உருப்படியாக பராமரித்து கொடுத்தால் போதும். பூங்காக்களில் 2 பணியாளர்கள் பராமரிப்பு பணிக்கு இருந்த நிலையில் ஒருவர் மட்டுமே தற்போது உள்ளார். பராமரிப்பு பணியே நடைபெறுவதில்லை. மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பூங்கா செயல்படுகிறது. மின்விளக்கு இல்லை. பூங்கா நுழைவு வாயிலில் குப்பை தொட்டி வைத்து, அப்பகுதியே குப்பை காடாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பூங்காவின் எதிரில் மதுக்கடை அமைந்துள்ளது. மின்விளக்கு இல்லாததால் பூங்காவின் பின்புறம் சமூக விரோத செயல் அதிக அளவில் நடைபெறுகிறது. பொறியாளர் முத்துக் குமார் கூறுகையில்: சூடாமணிபுரத்தில் போதிய தெரு விளக்கு இல்லை. சாலையின் இருபுறமும் செடிகள் மண்டிக் கிடக்கிறது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வரும் ஆட்டோக்கள் பொதுமக்கள் அதிவேகத்தில் செல்கின்றனர். அடிக்கடி விபத்து நடக்கிறது. தவிர 5 சாலை சந்திப்பில், கட்டட கழிவு கொட்டப்பட்டு குவியல் குவியலாக கிடக்கிறது.