பயனில்லாத ஒழுங்குமுறை விற்பனை கூடம்
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், சாக்கோட்டை விவசாயிகளுக்கு பயன்படாமல் இடைத்தரகர்களுக்கே அதிகம் பயன்படுவதால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏழு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகிறது. இதில் உலர்க்களம், உலர்கிடங்கு, சேமிப்பு கிடங்கு, ஆய்வுக்கூடம், வணிகர்கள் ஓய்வு விடுதி, ஏல அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதி உண்டு.விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 பைசா, வியாபாரிகளுக்கு ரூ.30 முதல் 50 பைசா வாடகையாக பெறப்படுகிறது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சேமித்து வைத்திடவும், நியாயமான விலைக்கு விற்பனை செய்திடவும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பயன்படுகின்றன. தவிர, விளைப்பொருட்களை ஈடு செய்து, குறைந்த வட்டியில் பொருளீட்டுக் கடனும் பெறலாம். பயன்படாமல் போனவிற்பனை கூடம்
சாக்கோட்டையில் இருந்து காரைக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் 25 கி.மீ.,துாரத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு வாகனச் செலவு, ஆட்கள் கூலி என ஒரு மூடைக்கு குறைந்தபட்சம் ரூ.200 வரை செலவாகிறது. அதிக செலவாகும் நிலை உள்ளதால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்த முடிவதில்லை. தவிர, பொருளீட்டுக்கடன், காப்பீடு என விற்பனை கூடத்தின் எந்த சலுகையையும் பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சாக்கோட்டை வட்டாரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வராததற்கு இடைத்தரகர்கள் காரணம் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். சிறு குறு விவசாயிகள் நேரடியாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் மூடைகளை எடுத்துசெல்ல முடிவதில்லை. ஆனால் மொத்தமாக விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு மூடைகளை எடுத்துச் சென்று, இடைத்தரகர்கள்ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாதுகாப்பாக வைக்கின்றனர். தவிர அதற்கான கடன் வசதிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். பின்பு நெல் விலை உயரும் போது மூடைகளை விற்று, அதிக லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் கடன் வாங்கி, விவசாயம் செய்யும் விவசாயிகள் லாபம் ஈட்ட முடிவதில்லை. அரசின் சலுகைகளையும் பெற முடிவதில்லை. நெல் கொள்முதல்நிலையத்தால் ஏமாற்றம்
கடந்த ஆண்டு மாவட்டத்தில் 53 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இம்முறை சாக்கோட்டை வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததாலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூடைகளை எடுத்துச்செல்ல போதிய நிதி இல்லாததாலும் விவசாயிகள் குறைவான விலைக்கு நெல் மூடைகளை வியாபாரிகளுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மண்டல மேலாளர் சிவராமன் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது 80 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சாக்கோட்டை வட்டாரத்தில் இடைத்தரகர் தலையீடு காரணமாகபல்வேறு பிரச்னைகள் நிலவியது. இதனால் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதில் சிக்கல் நிலவியது. தற்போது, பேச்சுவார்த்தை நடத்தியதன் பெயரில் சாக்கோட்டை பகுதியில் திருத்தங்கூர், சிறுகவயலில் கொள் முதல் நிலையம் அமைய உள்ளது.