ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடம் காலி
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர், சுகாதார ஆய்வாளர் உட்பட பல்வேறு காலி பணியிடங்களால் டாக்டர்கள், செவிலியர்கள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 236 செவிலியர்கள் இருக்க வேண்டிய நிலையில் 81 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். 151 காலிப் பணியிடங்கள் உள்ளன.அதேபோல கொரோனா ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, கொசு ஒழிப்பு என பல்வேறு தடுப்பு பணிக்கு சுகாதார ஆய்வாளர்கள் 140 பேர் இருக்க வேண்டும். 31 சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். 109 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல கர்ப்பிணிகள் தடுப்பூசி உட்பட கிராமங்கள் தோறும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் கிராம சுகாதார செவிலியர் 275 பேர் இருக்க வேண்டும். 181 பேர் உள்ளனர். 86 காலிப்பணியிடங்கள் உள்ளன.இதனால், மருத்துவப் பணி, நோய்த் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தவிர ஆன்லைன் மீட்டிங், தினசரி ரிப்போர்ட் பணிகளையும் முழுமையாக செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். ஆள் பற்றாக்குறை காரணமாக, டாக்டர்களும், தடுப்பு பணி, களப்பணிகளை உட்பட அனைத்து பணிகளையும் செய்வதற்கு கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.