வாகனங்கள் கழுவும் இடமாக மாறிய வைகை
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றுக்குள் வாகனங்களை இறக்கி சுத்தம் செய்வதால் தண்ணீர் மாசுபடுகிறது. தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு தேனி,திண்டுக்கல், மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட தண்ணீர் மானாமதுரையை நகர்ப் பகுதியில் உள்ள வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஒட்டி செல்கிறது. மானாமதுரை நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனங்களை வைகை ஆற்றுக்குள் இறக்கி ஆபத்தான முறையில் சுத்தம் செய்து வருகின்றனர். ஆங்காங்கே தலைச்சுமையாக மணல் கடத்துபவர்கள் பள்ளம் தோண்டி வைத்துள்ள நிலையில் வைகை ஆற்றில் இறங்குபவர்கள் அப்பள்ளங்களில் சிக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் இறங்க முடியாதவாறு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.