தொடர் முகூர்த்த நாட்கள் காய்கறி விலை கடும் உயர்வு
திருப்புவனம்: தொடர் முகூர்த்த நாட்களை ஒட்டி காய்கறிகளின் விலை மூன்று மடங்காக உயர்ந்ததால் திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.ஜூன் 5, 6, 8, 16, 27 என தொடர் முகூர்த்த நாட்கள் உள்ளன. திருமணம், புது மனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா என ஏராளமான விழாக்களை நிச்சயம் செய்துள்ளனர். பெரும்பாலான விசேஷங்களில் சைவ விருந்துக்கு காய்கறிகளின் தேவை அதிகம், கடந்து மூன்று நாட்களில் மதுரை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முகூர்த்த நாட்களில் காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம் என்றாலும் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.கிலோ கணக்கில் அவரை 150 ரூபாய் ( பழையது 50 ரூபாய்), கத்தரி 50 ரூபாய் (20 ரூபாய்), முருங்கை 100 ரூபாய் (40 ரூபாய்) பச்சை மிளகாய் 80 ரூபாய் (10 ரூபாய்), பீன்ஸ் 150 ரூபாய் (40 ரூபாய்) பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் விசேஷ வீட்டார்களுக்கு இது செலவை அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்திலும் ஆறு முகூர்த்த நாட்கள் உள்ளதால் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பில்லை. இனி ஐப்பசி மாதம் வரை விலை குறைய வாய்ப்பில்லை.