சிவகங்கை போஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள போஸ் ரோட்டில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பதால் காலை மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ளதுபோஸ் ரோடு மஜித்ரோடு சந்திப்பு. இந்த ரோட்டின்இருபுறமும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபம், தள்ளுவண்டி கடைகள் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து தெப்பக்குளம் சந்திப்பு வரை ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கிழக்கு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது கடைகளும்,போர்டும் வைக்கப்பட்டுள்ளது. சிலர் கடைகளின் முன் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். இந்த ரோட்டை பயன்படுத்தி தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட கல்வித்துறை, ஆர்.டி.ஓ., எல்.ஐ.சி., உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லவேண்டும். இந்த ரோட்டில் தான் உழவர் சந்தை உள்ளது. காலை மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி வழியாக குறுகலான ரோட்டில் எதிரே வாகனங்கள் வந்தால் மற்றொரு வாகனம் விலகி செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. அதேபோல் போஸ் ரோடு மஜித்ரோடு சந்திப்பில் உள்ள சேதம் அடைந்த பாலத்திலும் இதே பிரச்னை உள்ளது. இந்த ரோட்டை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.