அடிப்படை வசதி கூட இல்லாமல் கிராமங்கள் புறக்கணிப்பு! அதிகாரிகள் அலட்சியத்தால் போராடும் மக்கள்
தேவகோட்டை: அடிப்படை வசதிகளில் சிறு பணிகளை கூட அதிகாரிகள் கவனிக்காமல் உள்ளதால் மக்கள் படும் அவதி தொடர்கிறது.தேவகோட்டை தாலுகாவில் தேவகோட்டை நகராட்சி,தேவகோட்டை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியத்தில் 367 கிராமங்கள் உள்ளன. இங்கு மத்திய மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களில் சில பணிகள் நடக்கிறதே தவிர கிராமங்களில் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். போராட்டத்தால் பலன் இல்லை அடிப்படை தேவை சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்காததால் பிரச்னை பெரிதாகி வருகிறது. பல பணிகளை மக்கள் நேரிடையாக கூறியும் பலன் இல்லை. மக்கள் தொடர் போராட்டம் நடத்திய பின்பு சமாதான கூட்டம் நடத்தி விரைவில் செய்வதாக அந்த நேரத்தில் சமாளிக்கின்றனர். காலியாகும் கிராமங்கள் தேவகோட்டை ஒன்றியத்தில் திருவேகம்புத்துார் அருகில் களத்துார் கிராமத்திற்கு நடக்கக் கூட முடியாத நிலையில் 30 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட கிராவல் ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மட்டும் சிறிது பெயர்ந்தாலும் உருப்படியாக உள்ளது. அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லாததால் ஓரிரு குடும்பத்தை தவிர கிராமமே காலி செய்து தேவகோட்டை, காரைக்குடி சென்று விட்டனர். மோசமான ரோடு பேராட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தேங்கும் தண்ணீர் வெளியேற்றி சிமென்ட் குழாய் பதித்து தளத்தைப் உயர்த்த வேண்டும். ஆனால் பணிகள் எதுவும் நடக்காததால் பயனில்லாமல் காட்சி பொருளாக நிற்கிறது. தேவகோட்டை ஒன்றிய கிராமமான புளியாலில் அரசு உயர்நிலைப்பள்ளி செல்லும் ரோடு தொடர்ந்து மோசமாகி வருகிறது. மழை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் சகதியில் விழுகின்றனர். கிராம சபை உட்பட அதிகாரிகளிடம் கூறினால் , நிதி வரட்டும் என மூன்று ஆண்டுகளாக தட்டிக்கழித்து வருகின்றனர். அலட்சியத்தால் விபத்து இதே போல கண்ணங்குடி ஒன்றியத்தில் கூனவயல் கிராமத்தில் ரோட்டை அகலப்படுத்துதல் , குடிநீர், குறைந்த அழுத்தம் மின்சாரம் உட்பட சிறு சிறு பிரச்னைகளை கூட அதிகாரிகள் செய்யவில்லை. 13 உயிர்களை காவு வாங்கிய சிறுவாச்சி ரோட்டை அகலப்படுத்தாமல் அலட்சியத்தில் தினந்தோறும் விபத்து நடக்கிறது. இரக்காட்டி கண்மாய் அடைப்பை சீர் செய்யாததால் ஐந்து ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் நிலம் தரிசாக கிடக்குது. கிராமங்களில் கால்வாய்களை துார் வாரி சீர் செய்யாததால் மழை பெய்தாலும் வயல்களில் விழும் தண்ணீரை அப்புற படுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோல் பல அங்கன்வாடி மையங்களில், மின்சார வசதி, குடிநீர் வசதி இல்லாமல் இருக்கிறது. எல்லா அடிப்படை பிரச்னைகளும் சில ஆயிரங்களிலும், ஓரிரு பணிகள் ஒரு சில லட்சங்களிலும் முடிக்க கூடிய பிரச்னை தான். அதிகாரிகள் நினைத்தால் சிறு தேவைகளை உடனுக்குடன் செய்யலாம். அதிகாரிகள் எதுவும் செய்யாமல் புறக்கணிக்க காரணம் என்ன என்று கிராமத்தினர் சந்தேகம் எழுப்புகிறார்கள். புதிய திட்டப்பணிகள் இல்லையென்றாலும் மாவட்ட நிர்வாகம் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கி பணிகள் செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.