கிராமங்களில் பகலில் எரியும் விளக்குகள் நெருக்கடியில் தவிக்கும் ஊராட்சிகள்
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதி கிராமங்களில் தெரு விளக்குகள் பகலிலும் எரிவதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.கடந்த சில வருடங்களாக ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் கிராம பகுதிகளில் குடிநீர்,தெருவிளக்கு,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றன.ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு மாத ஊதியம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான கிராமங்களில் தெருவிளக்கு பகலிலும் எரிவதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் கூறியதாவது: கிராமங்களில் உள்ள தெருவிளக்குகளை இயக்குவதற்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில் அந்தந்த பகுதியில் உள்ள மக்களே தெருவிளக்குகளை இயக்கி வருகின்றனர். ஒரு சில நாட்களில் அதனை இயக்குபவர்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டால் அதனை இயக்க முடியாத காரணத்தினாலும் பல்வேறு கோளாறுகளினாலும் தெருவிளக்குகள் இரவிலும்,பகலிலும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது: தெருவிளக்குகள் தானாக எரிய, அணைய தானியங்கி சுவிட்ச் போடப்பட்ட நிலையில் அது தரம் இல்லாததால் போடப்பட்ட சில மாதங்களிலேயே பழுதடைந்து விடுகிறது. மேலும் தற்போது காற்று அதிகமாக வீசுவதால் பகலிலும் தெருவிளக்குகள் எரிந்து வருகிறது. இதனை இயக்குவதற்கு முறையான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் கூடுதலாக மின்கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.