உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

சிங்கம்புணரி: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தீபாவளி பண்டிகையை 71 ஆண்டுகளாக சில கிராம மக்கள் கொண்டாடாமல் இருப்பது வியப்பு தான். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.மாம்பட்டியைதாய் கிராமமாக கொண்டஎஸ்.மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, சந்திரபட்டி, எம்.வலையபட்டி, கிலுகிலுப்பப்பட்டி, இடையபட்டி, திருப்பதிபட்டி, கலுங்குபட்டி, தோப்புப்பட்டி, கச்சப்பட்டி, இந்திரா நகர், வாகரைபட்டி ஆகிய கிராமங்கள் 1954 முதல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. மற்ற ஊர்களை போல் இங்கு தீபாவளியன்று யாரும் பட்டாசுகளை வெடிப்பது இல்லை. பலகாரம் செய்வது இல்லை. புத்தாடை உடுத்துவதில்லை. தீபாவளி அறிகுறியே இல்லாமல் தெருவில் விளையாடும் சிறுவர்கள் வயலுக்குச் செல்லும் விவசாயிகள் என வழக்கமான காட்சியை தான் காண முடியும். எம்.எஸ்.உலகநாதன், ஒப்பிலான்பட்டி: ஆரம்ப காலத்தில் இப்பகுதி விவசாயிகள் வறுமையில் இருந்த போது கடன் வாங்கி விவசாயம் செய்தனர். அறுவடைக்குப்பின் கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த கால கட்டத்தில் தீபாவளி வந்ததால் விவசாயத்துக்கு வாங்கிய கடனையும் தீபாவளி செலவையும் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதை சமாளிக்க அப்போது இருந்த பெரியவர்கள் கூடி விவசாயப் பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை என்றும், அதற்கு பதிலாக அறுவடைக்கு பின்வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என்றும் முடிவு செய்தனர். இன்று வரை அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த பலர் வறுமையில் இருந்து மீண்டு நல்ல வசதியாக இருந்தாலும் கூட முன்னோர் வகுத்துக் கொடுத்த பாதையை அப்படியே கடைபிடித்து வருகிறோம். இக்கிராமத்தைப் பொறுத்தவரை வெளியூர்களில் இருந்து திருமணம் முடித்து வரும் பெண்கள் இங்கே தீபாவளி கொண்டாட முடியாது. அதே நேரம் இங்கிருந்து வெளியூர் திருமணம் முடித்துச்செல்லும் பெண்கள் அவர்கள் ஊர்களில் தீபாவளியை கொண்டாடி கொள்வார்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை