உள்ளூர் செய்திகள்

காத்திருப்பு

திருப்புத்துார் வரலாறு, புராணச்சிறப்பு மிக்க நகராகும்.சுதந்திரம் அடைந்த நாள் முதல் தாலுகா தலைநகராக உள்ளது. தற்போது மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள காரைக்குடி திருப்புத்துார் தாலுகாவில் இருந்த ஊராகும். ஆனால் திருப்புத்துார் இன்றளவும் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது.30 ஆண்டுகளாக நகராட்சி அந்தஸ்தை எதிர்பார்த்துள்ளது. பல முறை இதற்கான கோப்பு அனுப்பப்பட்டும் கிடப்பிலேயே உள்ளது. இதனால் நகரின் விரிவுக்கேற்ப அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியவில்லை.திருப்புத்துார் நகர் 13 ஆயிரம் வீடு,கடைகளுடன், 18 வார்டுகளுடன் தற்போது உள்ளது. நகராட்சியாவதற்கு தேவையான மக்கள்தொகையான 30 ஆயிரம் மற்றும் ஒரு கோடி வருவாய்க்கும் அதிகமாகவே திருப்புத்துார் பேரூராட்சி தற்போது உள்ளது. மேலும் தற்போது பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள கிராம குடியிருப்புகளை நிர்வாக வசதிக்காக சேர்க்கப்பட்டதில் ஒரு ஊராட்சி முழுமையாகவும், மற்றொரு ஊராட்சி பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.இதனால் மேலும் மக்கள்தொகை மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது. நகரைச்சுற்றிலும் கிராம ஊராட்சிகளின் குடியிருப்புகள் திருப்புத்துார் எல்லையை தொட்டு விட்டன. ஆனால் குடியிருப்புக்களின் எண்ணிக்கைக்கேற்ப விஸ்தரிப்பு பகுதிகளில் தெருவிளக்கு,சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளது. கழிவுநீர் வெளியேற்ற பாதாளசாக்கடைத் திட்டமோ, போதுமான உரக்கிடங்கு வசதியோ இல்லை. தினசரி மார்க்கெட் வசதியும் இல்லை. போதிய அளவில் விளையாட்டு மைதானங்களும், பூங்கா வசதிகளும் இல்லை.தற்போது திருப்புத்துார் பேரூராட்சியைச் சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் புறவழிச்சாலை செல்வதால், நகரைச் சுற்றி ஒரு சுற்றுச்சாலை உருவாகியுள்ளது. இதனால் திருப்புத்துாரை நகராட்சியாக அங்கீகரிக்கும் போது இந்த சுற்றுச்சாலைக்குள் உள்ள குடியிருப்புகளை திருப்புத்துார் நகராட்சி எல்லைக்குள் சேர்க்க பொதுமக்கள் கோரியுள்ளனர். இதன் மூலம் விரிவான நகருக்காக மாஸ்டர் பிளான்' திட்டமிடலுக்கு பொருத்தமாக இருக்கும். அதன் மூலம் திருப்புத்துார் நகரில் சமமான, பரவலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை