தகுதி, ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை
திருப்புவனம்: திருப்புவனத்தில் தகுதிச்சான்று பெறாமலும் உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கப்பட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரித்துள்ளார். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவ, மாணவியர்களை அழைத்து வர பல வாகனங்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான வாகனங்களுக்கு காப்பீடு, உரிமம் உள்ளிட்ட எந்த ஆவணமும் பெறுவதில்லை. உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் எந்த வித இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லை. நேற்று காலை சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் திருப்புவனம் பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தார், இதில் இரண்டு பள்ளிகளில் இருந்து இயக்கப்பட்ட 9 வாகனங்களுக்கு எந்த வித ஆவணமும் இல்லை என கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். அதற்குள் உரிய காப்பீடு செய்ய வேண்டும் இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 9 மாதங்களாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலரே ஆய்வாளர் பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடிவதில்லை என கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பன் கூறுகையில்: திருப்புவனத்தில் ஆய்வின் போது இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 வாகனங்களுக்கு எந்த வித ஆவணமும் இல்லை. ஒரு வாரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளோம், என்றார்.