தண்ணீர் திறப்பு நிறுத்தம்: ஷட்டர்கள் அடைப்பு
திருப்புவனம்: பூர்வீக வைகை பாசன விவசாயிகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் உள்ள ஷட்டர்கள் நேற்று அடைக்கப்பட்டன. வைகை அணை நீர்மட்டம்70.24 அடியாக உயர்ந்ததையடுத்து வைகை பூர்வீக பாசன விவசாய தேவைகளுக்காக அக் 27ல் வினாடிக்கு இரண்டாயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 27 முதல் 31ம் தேதி வரை ராமநாதபுர மாவட்ட பாசன விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் நேற்று சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட ஷட்டர்கள் அடைக்கப்பட்டன. வைகை ஆற்றில் தட்டான்குளம், மாரநாடு, கட்டிகுளம், கீழப்பசலை உள்ளிட்ட படுகை அணையில் சிவகங்கை மாவட்ட ஷட்டர்கள் அடைக்கப்பட்டு வைகை ஆற்றிலேயே அனைத்து தண்ணீரும் செல்கின்றன. சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்காக நவம்பர் 2 முதல் 6ம் தேதி வரை 5 நாட்களுக்கு 722 மில்லியன் கன அடி திறக்கப்பட உள்ளது. நேற்று காலை வரை மழை தண்ணீர் சென்ற நிலையில் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வருவதால் ஷட்டர்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பிரமனூர், பழையனூர், மாரநாடு, கானூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு சென்ற மழை தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்படும் போது அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட கண்மாய் களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.