வனத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பு
காரைக்குடி : காரைக்குடி சுற்றுப் பகுதியில் மான்கள் தண்ணீர் தேடி வெளியேறுவதை தடுக்க வனவிலங்குகள் ஆர்வலர்கள் சார்பில், வழங்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் வனப்பகுதியில் வைத்தனர். காரைக்குடி மாத்துார் ரோடு, சங்கரன்கோட்டை, பாரிநகர், ஆவுடைப் பொய்கை சாக்கோட்டை, சங்கன்திடல், புதுவயல் வனப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்கு வருகிறது. தண்ணீர் தேடி வரும் மான்கள் விபத்தில் சிக்கியும், நாய்கள் கடித்தும் உயிரிழந்து வருகிறது. வனவிலங்கு நல ஆர்வலர்கள் ஆஷா மற்றும் சுதா சொந்த செலவில் தண்ணீர் தொட்டிகளை வனத்துறையிடம் வழங்கினர். வன அலுவலர் பார்த்திபன், வனவர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மான்கள் நடமாட்டம் அதிக முள்ள 12 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வைத்துள்ளனர்.