ஆபத்தான கட்டடம் இடிப்பு எப்போது
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆபத்தாக விளங்கிய கட்டடத்தை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை காற்றில் பறக்க விட்ட விதமாக இதுவரை நடவடிக்கை இல்லை.இவ்வொன்றியத்தில்பிரான்மலை அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் பழைய அங்கன்வாடி கட்டடம் பாழடைந்த நிலையில் பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இக்கட்டடம் இடிந்து விழலாம் என்ற சூழலில் மாணவர்கள் அருகேயுள்ள கட்டடத்தில் பாடம் படித்து வருகின்றனர். ஆக.6ம் தேதி இப்பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் இக்கட்டடத்தின் அபாயம் குறித்து ஆசிரியர்கள் எடுத்துக்கூறி கட்டடத்தை இடிக்க வலியுறுத்தினர். உடனடியாக கட்டடத்தை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் இரண்டு மாதங்களைக் கடந்து இன்னும் கட்டடம் இடிக்கப்படவில்லை. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அச்சத்துடன் உள்ளனர்.உடனடியாக இக்கட்டடத்தை இடித்து அகற்ற அவர்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.