900 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி எப்போது
காரைக்குடி கழனிவாசலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 900 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி 2021ல் தொடங்கப்பட்டது.ஏழை எளியோருக்கான நிலையான ஒன்றிணைந்த வீடு கட்டும் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 11 ஏக்கரில், 19 தொகுதிகளாக 900 குடியிருப்பு கட்டப்படுகிறது. தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்படும் இவ் வளாகத்தில் திறந்தவெளி திரையரங்கம். அங்கன்வாடி, மருத்துவமனை, ரேஷன்கடை, விளையாட்டு பூங்கா, மார்க்கெட், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம், நுாலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது. இக்குடியிருப்பில் நீர்நிலைகளில் வசிக்கும் 900 பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கிழக்கு ஊரணி, வடக்கு ஊரணி, செல்லஞ்செட்டி ஊரணி, மலைக்காட்டு கண்மாய், குறிச்சி கண்மாய், வீரய்யன் கண்மாய் ஆதி திராவிடர் கண்மாய், குடிகாத்தான் கண்மாய் உட்பட 9 நீர்நிலைகளில் உள்ளபயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குலுக்கல் முறையில், பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.ஜூலை 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணி ஆக. 2024 ல் முழுமையாக முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வளாகத்திற்குள் அமைக்கப்பட இருந்த நிலையில் தற்போது அமராவதி புதூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் கொண்டு செல்லப்பட உள்ளது.பாதாள சாக்கடை திட்டப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. விரைவில் கட்டட பணிகளை முடித்து பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி, மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் கூறுகையில்: பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்திற்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அப்ரூவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 11.8 கிலோமீட்டர் துாரம் இணைப்பு வழங்கப்பட உள்ளது. ஒப்புதல் வந்ததும் பணி தொடங்கப்படும் என்றார்.