பிள்ளையார்பட்டி சுற்றுலா தலமாக உருவாகுமா; பஸ் ஸ்டாண்ட் இருந்தும் பயணில்லாமல் வீணாகிறது
பயணிகளின் வசதிக்காக 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் இன்று வரை முழுமையாக செயல்படவில்லை. இங்குள்ள வணிக வளாகம் பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்படுகிறது. பயணியர் கூடத்தில் மட்டும் இரு கடைகள் செயல்படுகின்றன. பயணியர் தங்கும் அறைகள் பயணிகளுக்கு பயன்படவில்லை. பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை. குறிப்பாக தனியார் பஸ்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்டிற்குள் வருவதில்லை. பயணியர் பஸ் ஸ்டாண்டிற்குள் காத்திருப்பதா அல்லது வெளியே காத்திருப்பதா என்ற தயக்கத்தில் இருக்க வேண்டியுள்ளது. பயன்படாத தொட்டி ஊராட்சி சார்பில் தொட்டியில் குடிநீர் வைக்கப்படுகிறது. அதை பயணிகள் பயன்படுத்த தயங்குகின்றனர். சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்க கோரியும் இதுவரை நடவடிக்கை இல்லை. பஸ் நிற்கும் பகுதியில் கூரை விழுந்தும் பராமரிக்கப்படவில்லை. இங்குள்ள போக்குவரத்து மற்றும் பஸ் ஸ்டாண்ட் பணியாளர்கள் அறையும் பயன்பாடின்றி பொருட்கள் வைக்கும் அறையாகவே உள்ளது. வாகன நிறுத்தம் தேவை பஸ்கள் வந்து சில நிமிடங்கள் கூட நிற்காததால் பஸ் நிற்கும் இடத்தில் டூ வீலர்கள் நிறுத்தப்பட்டு டூ வீலர் ஸ்டாண்டாக மாறி விட்டது. ஊருணி அருகிலும் அதிகமாக டூ வீலர்கள் நிறுத்தப்படுகிறது. தனி டூ வீலர் நிறுத்தம் அமைக்க நீண்ட நாட்களாக கோரியும் நடவடிக்கை இல்லை. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஊருணியைச் சுற்றிலும் பயணியர் பாதுகாப்பிற்கு வேலி அமைத்து, பூங்கா அமைக்க கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. ஊருணி அருகிலுள்ள சுகாதார வளாகமும்,நுாலகமும் செயல்படுவதே இல்லை. சுற்றுலாத்துறையினர் அபிவிருத்திப் பணிகளை கோயிலைச் சுற்றியே நிறைவேற்ற திட்டமிடுகின்றனர். ஆனால் அரசு இடம் இல்லாததால் திட்டப்பணிகள் கைவிடப்படுகின்றன. அதிகமாக பயணிகள் வந்து செல்லும் இங்கு கழிப்பறை, குளியலறை, உடை மாற்றும் அறை கூடுதலாக தேவை என்ற நிலையில் அதை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவேற்றலாம். ஆர்ச்சிலிருந்து கோயிலுக்கு செல்லும் முதன்மை ரோட்டில் இருபுறமும் உள்ள கடைகள் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகமாக ரோட்டை ஆக்கிரமித்தே வியாபாரம் செய்வதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு உள்ளது. விழாக் காலங்களில் விற்பனையாகும் நடைபாதை கடைகளில் உணவு பொருட்களிலும் தரம் இல்லை என்று பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பிள்ளையார்பட்டி சந்திரமோகன் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் டூ வீலர்கள் நுழைவதால் பயணிகள் விபத்தில் சிக்குகின்றனர். தனியாக வாகன நிறுத்தம் வேண்டும். பஸ் ஸ்டாண்ட் முழுமையாக செயல்பட இங்கிருந்து சிவகங்கை, புதுக்கோட்டை ஊர்களுக்கு புதிய வழித்தடம் உருவாக்க வேண்டும். இங்கு வந்து செல்லும் பஸ்கள் சில நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். தற்போதுள்ள பூங்காவில் பகுதி மட்டுமே பராமரிக்கப்படுகிறது. முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.' என்றார். ஊராட்சித் தரப்பில் கூறுகையில், இரு சக்கர வாகன நிறுத்தம், ஊருணியில் நடைபாதை, வேலி, பூங்கா அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. சுகாதார வளாகம் மகளிர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நுாலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. என்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி வழியாகவே சுற்றுலா பயணிகள் மற்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வசதியாக சுற்றுலாத்துறை அலுவலகம் துவக்கலாம். மாற்று வழியாக தற்போது நான்குவழிச் சாலையில் உருவாகும் சர்வீஸ் ரோட்டையும், திருப்புத்துார் காரைக்குடி ரோட்டை இணைக்கும் ரோட்டையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.