சிவகங்கை :  உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்தும் ஒளிரும் விளக்கு, பதவி போர்டுகளை வாகனங்களில் வைத்து செல்வது சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர், கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் என பல்வேறு நிலைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி வகித்தனர். ஒரு மாவட்ட ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்கள், 445 கிராம ஊராட்சிகளின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.அவர்களுக்கான பதவி காலம் 2025 ஜன.,5 ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தற்போது அந்தந்த மாவட்ட அதிகாரிகள், பி.டி.ஓ., ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த நாளில் இருந்து, அவர்களுக்கான அனைத்து உரிமை, அதிகாரங்களும் பறிக்கப்படும்.தங்களது பதவி காலங்களில் 5 ஆண்டு வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது வாகன முகப்பில் ஒளிரும் விளக்கு, பதவி பெயரில் விளம்பர பலகை வைத்து, போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு வந்தனர். இது போன்ற போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டவர்கள் மீது போலீஸ் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் தற்போது பதவிக்காலம் முடிந்தும், ஏராளமான (குறிப்பாக தி.மு.க.,வினர்) தலைவர், கவுன்சிலர்களின் வாகன முகப்பில் ஒளிரும் விளக்கு பொருத்தியும், வாகன முன்பகுதியில் பதவியை குறிப்பிட்டு விளம்பர பலகை வைத்தும் உலா வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தியுள்ள ஒளிரும் விளக்கு, பதவி பெயர் பலகைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.