உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணுமா நெடுஞ்சாலைத்துறை

திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணுமா நெடுஞ்சாலைத்துறை

திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசல் தீராத நிலையில் நெடுஞ்சாலைத்துறை மாற்று வழிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 157 கிராமங்களில் இருந்து தினசரி ஏராளமானோர் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லுாரி செல்லவும், வெளியூர் செல்லவும் வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினசரி திருப்புவனம் வந்து செல்கின்றனர். இதுதவிர மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், புஷ்பவனேஷ்வரர் கோயில், திதி பொட்டல் உள்ளிட்ட வற்றிற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் நெரிசல் தீர்ந்தபாடில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க மாற்று வழிகளை நெடுஞ்சாலைத்துறை தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை ஆற்றோரம் ரோடு வசதி

மதுரையை போன்று வைகை ஆற்றை ஒட்டி தட்டான்குளத்தில் இருந்து திருப்புவனம் வரை மூன்று கி.மீ., துாரத்திற்கு சாலை அமைத்தால் சிவகங்கை, மடப்புரம், திதி பொட்டல், புஷ்பவனேஸ்வரர் கோயில் செல்பவர்கள் என பலரும் நேரடியாக அந்த பாதையில் சென்று விடுவார்கள். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். பொதுமக்கள் கூறுகையில்: திருப்புவனம் நகரின் ஒருபுறம் வைகை ஆறு மறுபுறம் மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை செல்கிறது. நாளுக்கு நாள் நகரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில் ரோட்டை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை ஒட்டி சாலை அமைப்பதுதான் நெரிசலை தீர்க்க ஒரே வழி. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வைகை ஆற்றை ஒட்டி ரோடு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !