தெப்பக்குள படித்துறையில் குடிமகன்கள் அட்டகாசம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா
திருப்புத்துார்: திருப்புத்துார் தெப்பக்குளமான சீதளிக்குளப் படித்துறைகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா 10ம் நாளை முன்னிட்டு சீதளி குளத்தில் தெப்பம் நடைபெறும். காரைக்குடி ரோட்டில் கோயில் அருகில் டாஸ்மாக் கடை துவக்கப்பட்டது முதல் குடிமகன்கள்' இக்குளத்தின் தெற்கு படித்துறையில் பகலிலேயே மது அருந்தத் துவங்கியுள்ளனர். அங்கேயே மதுபாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் பெண்கள் படித்துறைகளுக்கு வருவது குறைந்து விட்டது. இரவு நேரங்களில் மற்ற படித்துறைகளும் ' பார்' ஆக சமூக விரோதிகள் மாற்றி விட்டனர். கடந்த ஆண்டு தெப்பத்தின் போது தெப்பம் இழுத்த கிராமத்தினர் கால்களில் உடைந்த மதுபாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டது. தற்போது சில நாட்களில் தெப்பம் நடைபெற உள்ளது. இதனால் தெப்பக்குளத்தை சுற்றிலும் பக்தர்கள் கூடுவார்கள். இப்பகுதியில் மது அருந்த வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.