உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் ஓடும் சிற்றாறு, வரத்து கால்வாய் தூர்வாரப்படுமா: கருவேல மரத்தை அகற்றினால் தான் விவசாயம்

மாவட்டத்தில் ஓடும் சிற்றாறு, வரத்து கால்வாய் தூர்வாரப்படுமா: கருவேல மரத்தை அகற்றினால் தான் விவசாயம்

சிவகங்கை மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகனியாறு, கிருதுமால், மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 சிற்றாறுகள் உள்ளன. இதில், உப்பாறு சிலம்பாறு மதுரை மாவட்டம், திருவாதவூர் பெரிய கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் வழியாக மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கலக்கிறது. நாட்டார் கால்வாய், ஊத்திக்குளம் பெரிய கண்மாயிலும், சறுகணி ஆறு அலவாக்கோட்டையில் தொடங்கி, ராமநாத புரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை அடைகிறது. மணிமுத்தாறு ஏரியூர் பெரிய கண்மாயில் தொடங்கி பாம்பாற்றில் கலக்கிறது. விருசுழியாறு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி முருக்கை கண்மாயில் தொடங்கி கல்லல் அருகே பொய்யலுார் அணையை அடைகிறது. பாம்பாறு திருப்புத்துார் தாமரைக் கண்மாயில் தொடங்கி, மணிமுத்தாறாக மாறி வங்க கடலில் கலக்கிறது. வைகையாறு தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் பகுதிக்குச் சென்று அங்கிருந்து அழகன்குளம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. வைகை ஆறு மட்டுமே தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.மழைக் காலங்களில் பெய்யும் நீர் இந்த ஆறுகள் வழியாகச் சென்று மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 968 கண்மாய்கள், 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்களில் நேரடி யாகவும், மறைமுகவும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர்பு போன்று அமைந்துள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் 2 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆறுகள் வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்காத தால் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. பல இடங்களில் மணல் திருட்டு நடைபெற்று பெரிய பள்ளங்கள் உள்ளது. இனி வரும் காலங்களில் விவசாயத்தை பிரதான தொழிலாகவும், முதன்மை தொழிலாகவும் மாற்ற வேண்டுமெனில் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மட்டுமின்றி வரத்துக் கால்வாய்களையும் முறையாக பராமரிக்க அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Abdul Rahim
செப் 14, 2025 12:41

இதில் பாலாறு என்பது கரந்தமலையில் தோன்றி நத்தம் சிங்கம்புணரி, காளாப்பூர், முறையூர் வழியாக ஓடி திருப்பத்தூர் பெரிய கண்மாயை அடைந்து பின் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக கடலில் கலக்கிறது ஆனால் ஆறு எங்கும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து ஆற்றையே ஆக்கிரமித்து விட்டது அவற்றை நீக்கிவிட்டு தூர்வாரினால் அந்த பகுதி முழுதும் முழு பாசனம் மற்றும் குடிநீர் ஊற்றுகள் நீர் நிறைந்து பெரும் நன்மை பயக்கும், தினமலர் தொண்டுள்ளதோடு அதை பற்றிய செய்தியை வெளியிட்டு அரசிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விழிப்பை ஏற்படுத்தவேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறேன், சிங்கம்புணரியில் இருந்து மருதிப்பட்டி வழியாக முறையூர் செல்லும் ரோட்டில் உள்ள முறையூர் பாலாற்று பாலத்தில் நின்று பார்த்தாலே தெரியும் முற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து இருப்பது.


சமீபத்திய செய்தி