உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சந்தையில் மாறிய காய்கறி பை பணம், நகையை ஒப்படைத்த பெண்

சந்தையில் மாறிய காய்கறி பை பணம், நகையை ஒப்படைத்த பெண்

சிவகங்கை : காளையார்கோவில் சந்தையில் தவறுதலாக எடுத்துச்சென்ற பையில் இருந்த பணம் மற்றும் நகையை போலீசில் ஒப்படைத்த பெண்ணை டி.எஸ்.பி., உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜேஸ்வரி 65. நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்தவர் நித்யா 30. இருவரும் நேற்று முன்தினம் காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்க சென்றனர். காய்கறி வாங்கும்போது தவறுதலாக இருவரும் கொண்டு வந்த பையை மாற்றி எடுத்து சென்றனர்.ராஜேஸ்வரியின் பையில் ரூ.50 ஆயிரமும் 2 பவுன் தங்க செயினும் இருந்துள்ளது. வீட்டிற்கு சென்ற நித்யா பையில் இருந்த காய்கறியை எடுத்து பார்க்கும்போது பை மாறியிருப்பது தெரியவந்தது. உடனே நித்யா காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து தகவல் தெரிவித்து நகையையும், பணத்தையும் ஒப்படைக்க சென்றார்.அங்கு ராஜேஸ்வரி புகார் அளித்திருந்த நிலையில் போலீசாரின் முன்னிலையில் தங்க செயினையும் பணத்தையும் ராஜேஸ்வரியிடம் நித்யா ஒப்படைத்தார். நித்யாவின் நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி, டி.எஸ்.பி., அமலஅட்வின் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ