உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண் மரணம்: டாக்டர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

பெண் மரணம்: டாக்டர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் பெண் இறந்த நிலையில், தவறான சிகிச்சையளித்ததாக கூறி டாக்டர்கள், பணியாளர் மற்றும் வக்கீல் உள்ளிட்ட நான்கு பேர் மீது 10 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு ஜன., 2ல் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகா, கொடுங்குளத்தை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி அருள்மலர்செல்வி, 43, தன் 10 வயது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். மகன் சிகிச்சை பெற்ற நிலையில், அருள்மலர் செல்வி தனக்கும் உடல் நிலை சரியில்லை என நர்சிடம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தலைமை டாக்டர் ஏழுமலை அந்த பெண்ணை பரிசோதித்து ஊசி, மருந்து எழுதி கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றும் நர்சுக்கு படிக்காத, பத்தாம் வகுப்பு படித்த உஞ்சனையை சேர்ந்த வேதம்மாள், 60, அருள்மலர்செல்விக்கு ஊசி போட்டுள்ளார். இதில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்து போனார். டெஸ்ட் ஊசி செலுத்திய பின் தான் இந்த ஊசியை போட வேண்டும். ஆனால், டெஸ்ட் ஊசி செலுத்தாமல் ஊசி போட்டது தெரிய வந்தது. அருள்மலர் செல்வி உடல் ஜன., 3ல் ராமநாதபுரம் மாவட்டம், கொடுங்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அருள்மலர் செல்வி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தேவகோட்டை போலீசில் உறவினர்கள் புகார் செய்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜன., 7ல் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முன்னிலையில் அருள்மலர் செல்வி உடல் தோண்டி, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டி.எஸ்.பி.. மருத்துவமனையை ஆய்வு செய்ததோடு, அங்குள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அதில் வேதம்மாள் அவருக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் இறப்பிற்கு காரணம் ஊசி மருந்து தான் என, மருத்துவத்துறை அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விசாரணையில், தேவகோட்டை வக்கீல் ஹரிபிரசாத், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பணி செய்யும் நர்சுக்கு படித்த மற்றொரு பெண்ணிடம், அவர் சிகிச்சையளித்ததாக விசாரணையில் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இந்த தகவலை டி.எஸ்.பி.,யிடம் அந்த நர்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, டாக்டர் ஏழுமலை, அவரது மகன் ஹாலீஸ்குமார், வக்கீல் ஹரிபிரசாத், பணியாளர் வேதம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். வக்கீல், டாக்டர் ஹாலிஸ்குமார் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்ததை தொடர்ந்து, டாக்டர், வக்கீலை அக்., 22ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை