பூமாயி அம்மன் கோயிலில் யாகசாலை இன்று துவக்கம்
திருப்புத்துார், : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஏப்.11ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. இக்கோயிலில் மூலவர்களான சப்தமாதர்களில் நடுவரான வைஷ்ணவியே பூமாயி அம்மன்' ஆக பக்தர்கள் வழிபடுகின்றனர். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணி நடந்து நான்காவது கும்பாபிஷேகம் ஏப்.11ல் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜை இன்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,தன பூஜைகளுடன் துவங்குகின்றன. நாளை மாலை 6:30 மணிக்கு முதற்கால யாக பூஜை, ஏப். 9 காலை 9:00 மணிக்கு 2ம் காலயாக பூஜையும் ,மாலை 6:00 மணிக்கு 3ம் காலயாக பூஜைகளும் நடைபெறும். ஏப்.10ல் காலை 9:00 மணிக்கும், மாலையில் 6:00 மணிக்கும் 4,5ம் காலயாக பூஜைகள் நடைபெறும். ஏப்.11 அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும்,காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 8:50 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும்.