தகராறில் பெண் தற்கொலை அச்சத்தில் இளைஞர் தற்கொலை
சிவகங்கை:சிவகங்கை அருகே தமராக்கியில் இளைஞர் திட்டியதால் திருமணமான பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் அந்த பெண்ணை திட்டிய இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம் மனைவி பிரமிளா 27. ஹரிராம் தாய்லாந்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளது. பிரமிளா குழந்தைகளுடன் தமராக்கி கிராமத்தில் வசித்து வருகிறார். ஹரிராம் உறவினர் பெயின்டர் அஜித்குமார் 25 அதே பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரமிளா அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அஜித்குமாரும் அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவரது உடலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், அஜித்குமார், ஹரிராம் உறவினர்கள். நேற்று முன்தினம் இரவு பிரமிளாவிடம் அஜித்குமார் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த பிரமிளா தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அஜித்குமாரும் அச்சத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.