காரைக்குடியில் ரூ.20 லட்சம் பெற்று 2 கிலோ போலி நகை தந்து மோசடி; வடமாநில இளைஞர்கள் கைவரிசை
காரைக்குடி; சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெங்கடாச்சலம் என்பவரிடம் ரூ.20 லட்சம் பெற்று, 2 கிலோ போலி தங்க மாலையை விற்று ஏமாற்றியதாக வடமாநில இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேவகோட்டை அருகே கீழக்கடியாவயல் வெங்கடாச்சலம் 63. அங்கு இரும்பு தளவாட பொருட்கள் விற்பனை செய்கிறார். இவரிடம் வட மாநில இளைஞர்கள் அடிக்கடி வந்து கட்டட வேலைக்காக இரும்பு கம்பிகளை வாங்கி சென்றுள்ளனர். அப்போது தங்களிடம் 2 கிலோ தங்கமாலை இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு ரூ.30லட்சம் தருமாறு கேட்ட நிலையில், அவர் ரூ.20 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் 2 தங்க மணிகளை வழங்கியுள்ளனர். அதை அவர் நகை கடையில் பரிசோதித்தபோது தங்க மணி தான் என உறுதி அளித்தனர். இதனால் தங்க மாலையை வாங்கி கொள்வதாக தெரிவித்தார். பின்னர் காரைக்குடிக்கு உறவினர்களுடன் காரில் சென்று ரூ.20 லட்சத்தை தந்து அவர்களிடம் 2 கிலோ தங்க மாலையை வாங்கியுள்ளார். பின்னர் அதனை பரிசோதித்தபோது போலி என தெரிந்தது. இதுதொடர்பாக காரைக்குடி வடக்கு போலீசார் வடமாநில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.