க.பரமத்தியில் 38.5 செல்சியஸ் வெப்பம் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
க.பரமத்தியில் 38.5 செல்சியஸ் வெப்பம் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவுகரூர்:கரூர் பரமத்தியில், 38.5 செல்சியஸ் என, தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழகத்தின் மைய பகுதியாக விளங்கும் கரூர் மாவட்டத்தில் வெப்பம் அதிகம். ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை காலம் தொடங்க இன்னும், 15 நாட்கள் இருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம், 36.5 செல்சியஸ் வெயில் பதிவான நிலையில், நேற்று, கரூர் பரமத்தியில், 38.5 செல்சியஸ் (101.3 டிகிரி பாரன்ஹீட்) பாதிவாகி இருந்தது. நேற்று தமிழகத்தின் அதிகபட்ச வெப்ப நிலை இது தான். தொடர்ந்து மாவட்டத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு நிலப்பரப்பில், 33 சதவீத மரங்கள், காடுகள் இருந்தால்தான் அந்த பகுதி செழிப்பாக இருக்கும். வெப்பம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் தன்மையோடு, அந்த பகுதி இருக்கும். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும், 4 சதவீதம் மட்டுமே மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஒன்றியத்தில், 2 சதவீத அளவிலேயே மரங்கள் இருக்கின்றன. மீதமுள்ள, 2 சதவீத மரங்கள்தான், கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளன. இதனால் தான், இங்கே வெப்பம் வேலுாரை விட அதிகம் உள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதும் வெப்பம் அதிகரிக்க காரணம். தற்போது மார்ச் மாத்தில், 38.5 செல்சியஸ் நேற்று வெப்பம் நேற்று பதிவாகி உள்ளது. 2.3 செல்சியஸ் இயல்வை விட அதிகமாகும். கடந்த வாரம் மழையால், ஒரு சில நாட்கள் வெப்பம் குறைந்த நிலையில் மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர். க.பரமத்தி பகுதியில் கல்குவாரிகள் அதிகளவில் இருப்பதும் வெப்பம் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.