முகமூடி கொள்ளை நாடகமாடிய ஓய்வு டி.ஜி.பி., தம்பி மகன் கைது
தென்காசி:தென்காசி அருகே புளியங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ராஜேந்திரன் பூர்வீக வீட்டில், அவரது தம்பி அமிர்தராஜ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் அமிர்தராஜின் மகனான 13 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி கொள்ளையர்கள் சிலர் கைகளை கட்டிப்போட்டு, முகத்தில் ஸ்பிரே அடித்து, பீரோவில் இருந்த, 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தான். புளியங்குடி போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை. சிறுவனிடம் மீண்டும் விசாரித்தபோது, தன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பெற்றோர் பணம் தராததால், பீரோவில் இருந்த பணத்தை திருடியதாகவும், அதை மறைக்க முகமூடி கொள்ளை நடந்ததாக நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டான். போலீசார் சிறுவனை கைது செய்தனர்.